Showing posts with label விருந்தினர். Show all posts
Showing posts with label விருந்தினர். Show all posts

Thursday, December 08, 2016

புரட்சித் தலைவி ‘அம்மா’

 முக நூலில் ’பழைய’ நண்பர் சுஜாதா தேசிகன் எழுதிய இடுகை இது. கீழே உள்ள ஜெயா படம் அவர் வரைந்தது.  சுஜாதாவின் “ஸ்ரீரங்கத்து தேவதைகள்” சிறுகதைத் தொகுப்புக்கு,  அவர் வரைந்த ஸ்ரீரங்கம் ஊர் சார்ந்த படங்கள் (Pencil sketch) அத்தனை அருமையாக இருக்கும்
Follow · December 6 near Bangalore ·

புரட்சித் தலைவி ‘அம்மா’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் ஜெ.ஜெயலலிதா நேற்று காலமானார்.

அவரது ஓவியம் ஒன்றை 1995ல் வரைந்தேன்.
“ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு தைரியமா இருக்கா பாருடா” என்று ஓவியம் வரைய சொன்னார் என் அப்பா.

அதற்குப் பிறகு அவரைக் கவனிக்க தொடங்கியதில் அவருடைய ஒவ்வொரு மூவும் ”இரும்பு மனுஷி”யாக காட்சி அளித்தார். கூட்டணியாக இருக்கட்டும், திட்டங்களாக இருக்கட்டும் ‘அவுட் ஆஃப் பாக்ஸ்’ என்பார்கள் அது போல பல முடிவுகளை எடுத்தார்.

படித்த அறிவுஜீவிகளைக் காட்டிலும் அடித்தட்ட மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்த்து பார்த்துச் செய்தார். ரவுடிகளால் நடத்தப்படும் பல பத்திரிக்கைகள் அவருக்கு எதிரியாக எழுதியும், அட்டைப்படம் போட்டு கேவலப்படுத்தியது, அது எல்லாம் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை மாறாக மேலும் அவர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார்.

கடவுள் இல்லை என்று பேசிக்கொண்டு அதையே பெரிய கொள்கையாக கடைப்பித்துக்கொண்டு இருப்பவர்களிடம் “நான் கோயிலுக்கு போய் சாமி கும்பிடுவேன்” என்று அவர்களுக்குப் பதிலடி கொடுத்தார். ஒரு பெண் என்றும் பாராமல் அவரை harass செய்து ’இரட்டை அர்த்த ஜோக்’ அடித்து எங்கே தட்டினால் வலிக்கும் என்று தெரிந்து கொண்டு அவமானப்படுத்தியவர்களை ‘மைனாரிட்டி அரசு’ என்று ஒரே வார்த்தையில் பதிலடி கொடுத்து சாய்த்தார். சட்டசபையில் அவருடைய துணிச்சலான பேச்சை இனிமேல் கேட்க முடியாது.

அரசியலை விட்டுத் தள்ளுங்கள், அவர் ஆட்சிக்கு வந்தால் ரவுடிகள் வாலைச் சுருட்டிக்கொண்டு இருப்பார்கள் என்பது பரவாலான நம்பிக்கை. தமிழ்நாட்டுக்கு ’அமைதிப்பூங்கா’ என்ற பெயரை பெற்றுக்கொடுத்தார்.

தமிழ்நாட்டுக்கு வேறு என்ன நல்லது செய்துவிட்டார் என்று கேட்கலாம், நாத்திகர்களிடமிருந்து நம்மை காப்பாற்றினாரே அது போதாதா ?

அவருடைய படத்தை ஓவியமாக வரைந்ததற்கு பெருமைப் படுகிறேன்.

வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே !

Thursday, April 28, 2016

தமிழ் நாட்டின் சாதி சார் அரசியல் - சில குறிப்புகள்

தமிழ்  நாட்டின் சாதி சார் அரசியல் - சில குறிப்புகள் - கல்யாணராமன் ( https://twitter.com/kalyanasc/ )

இவ்விடுகை ராஜன் குறை தமிழ்நாட்டில் சாதிசார் அரசியல் பற்றி எழுதியிருக்கும் முகநூல் குறிப்பை   முன்வைத்து எழுதப்பட்டது.  அதை வாசித்து விட்டு கல்யாணராமன் அவர்களின் (எதிர்வினைக்)கட்டுரையை வாசிப்பது பொருத்தமானதாக இருக்கும்.

சுருக்கமாக ராஜன் குறையின் வாதம் இதுதான். அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வெற்றியென்பது பல சாதிச் சமூகத்தின் ஆதரவைப் பெறுவதிலேயே இருக்கிறது. எந்த சாதியைச் சேர்ந்த வாக்கு வங்கியும் தன்னளவிலேயே வெற்றி பெற்றுத்தரும் அளவுக்கு எண்ணிக்கை பலம் வாய்ந்ததாக இருப்பதில்லை. எனவே, வெளிப்படையான சாதிக் கட்சிகளைத் தவிர, மற்ற தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் - குறிப்பாக, இரு பெரும் திராவிடக் கட்சிகள் - சாதி வேறுபாடற்ற மக்கள் தொகையின் ஆதரவைப் பெற்றுத்தான் ஆட்சியைப் பிடிக்கிறார்கள், நடத்துகிறார்கள்; எனவே ஆதிக்க சாதிகளின் கூட்டதிகாரம் என்று சொல்வதெல்லாம் மாயை, குழப்பத்தில் எழுந்த மனப்பதிவு என்று கதைக்கிறார்!

இதைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பல சாதிச் சமூகத்தினரின் ஆதரவின்றி தொகுதி மட்டத்திலோ மாநில மட்டத்திலோ ஆட்சியைப் பிடிக்கமுடியாது என்பது உண்மைதான். Universal adult franchise-ஐ அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட தேர்தல் சனநாயக ஆட்சி முறையில் இது வேறெப்படியும் இருக்கமுடியாது. உள்ளபடியே, மக்கட்தொகையில் 20 விழுக்காடாக இருக்கும் பட்டியல் சாதியினரின் (SC/ST) கணிசமான ஆதரவைப் பெற்றுத்தான் திமுகவும் அதிமுகவும் ஆட்சியைக் கைப்பற்றி வந்திருக்கின்றன. ஆனால் ஆதரவை அளிப்பவர்களுக்கெல்லாம் அதிகாரத்தில் பங்கோ ஆட்சியின் பயனோ கிடைத்துவிடுவதில்லை என்பதுதான் உண்மை. இந்தக் கைப்புண்ணுக்கு கட்டாயமாக எந்தக் கண்ணாடியும் தேவைப்படாது.

ஒவ்வொரு திமுக/அதிமுக ஆட்சியின்போதும், அந்த சட்டமன்றத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த கணிசமான பட்டியல் சாதியைச் சேர்ந்த தனித் தொகுதி உறுப்பினர்கள் இருக்கக்கூடும். ஆனால் அவர்களுக்கு பதவியும் அதிகாரமும் கிடைப்பது குதிரைக் கொம்பாகவே இருக்கிறது. எனவே சாதிப் பன்மைத்துவத்திலிருந்து பெறப்படும் வாக்கு ஆதரவு, சாதி சார்ந்த புறக்கணிப்புக்கும், அதன் மறுபக்கமான ஆதிக்கசாதிக் கூட்டதிகாரத்தின் இயக்கத்துக்கும் இடையூறாக இருக்கும் என்பதே ஒரு மாயை தான். நடப்பில் அப்படியெல்லாம் கிடையாது.

அதிகாரப் பகிர்வில் பட்டியல் சாதியினருக்கு இப்படி நேர்கிறதென்றால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் அடித்தட்டுப் பிரிவினரின் - அதாவது ஆதிக்க சாதியினரின் எண்ணிக்கைப் பெரும்பான்மை வாய்க்கப்பெறாத சிறுபான்மை வகுப்பினரின் - கதி என்ன? இவர்களுக்கு உள்ளூர் எண்ணிக்கை பலத்தின் அடிப்படையில் ஊராட்சி அதிகாரமும் சிறுசிறு ஒப்பந்தங்களும் கிடைக்க  வழியுண்டு   . நகராட்சிகளில் வார்டு கவுன்சிலர் பதவிகளும் அதனால் பெறக்கூடிய ”பயன்களும்” கிடைக்கப் பெறலாம். இவற்றைவிட மேலான மட்டங்களுக்கு இவ்வகுப்பினர் சுலபமாக வந்துவிடமுடியாது. இங்குதான் தொகுதிவாரி எண்ணிக்கைப் பெரும்பான்மை (மொத்த மக்கள்தொகையில் 30 விழுக்காடுகளுக்கும் மேலான எண்ணிக்கை பலம்) தேர்தல் களத்தில் கொங்கு வேளாள கவுண்டர், முக்குலத்தோர், நாடார், வன்னியர்,  போன்ற வகுப்பினரின் “இயல்பான” ஆதிக்கத்துக்கு வழிவகுக்கிறது.

மேலும், ஆட்சி அதிகாரத்தை நுகர்ந்து சேர்த்திருக்கும் செல்வமும் சமூகச் செல்வாக்கும் இவர்களுடைய தொடர்ந்த ஆதிக்கத்துக்கு உறுதுணையாக இருக்கின்றன. (இவற்றில் கொங்கு வேளாள கவுண்டர் மற்றும் முக்குலத்தோர் போன்றவை எண்ணிக்கை பலத்தையும் அதிகாரத்தையும் குறிவைத்து, தங்களுக்குள் கொள்வினை கொடுப்பினை இல்லாத தனிச் சாதிகளை இணைப்பதன் மூலம் செயற்கையாக உருவாக்கப்பட்ட சாதித் தொகுதிகள் தாம்.) தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் சாதிவாரிப் பகுப்பிலும் அமைச்சர்களின் சாதிவாரிப் பகுப்பிலும் இந்தக் கூட்டதிகாரத்தை தெளிவாகக் காணமுடியும். மற்றபடி அரசின் ஆதரவினால் நேரடியாக உருவாக்கப்படும் கல்வி வணிகத்திலும் சாராய ஆலை உரிமங்களிலும், மணல் கொள்ளை நிறுவனங்களிலும், ஏன் ஊடகத்துறையிலும் கூட இந்த வகுப்பினரின் ஆதிக்கத்தை கண்டுகொள்ள முடியும்.

இட ஒதுக்கீடும் அவ்வாறே இந்த ஆதிக்க சாதியினரின் நன்மைக்காகவே எந்த மாற்றமுமின்றி தொடரப்படுகிறது. 1970-இலேயே தங்கள் மக்கட்தொகை விகிதத்துக்கு மிக அதிகமாகவே கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளைப் பெற்றவர்களாக இவர்கள் அடையாளப் படுத்தப்பட்டிருக்கிறார்கள் (சட்டநாதன் கமிஷன் அறிக்கை). இருந்தும் தமிழக அரசுகள் வாய்ப்புகளின் மொத்த விகிதத்தை உயர்த்தினார்களேயன்றி இவ்வாதிக்கத்தைக் குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தங்கள் எண்ணிக்கை பலத்தால் வன்னியர்கள் போராடி ஆட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் அதிகாரப் பகிர்வையும் சமூக செல்வாக்கையும் நிறுவ முடிந்திருக்கிறது.

ஆனால் BC/MBC என்ற பட்டியலில் சிக்கித் தவிக்கும் நலிந்த, எண்ணிக்கைச் சிறுபான்மை, வகுப்பினர் இந்த எண்ணிக்கைப் பெரும்பான்மைச் சாதியினரின் பிடியிலிருந்து மீள வாய்ப்பே இல்லை என்று தான் கூறவேண்டும். இட ஒதுக்கீடு மூலம் தங்களுக்கு கிடைத்துவரும் விகிதத்துக்கு மீறிய நலன்களைப் பாதுகாத்திடவே சாதி அடிப்படையில் தரப்படும் இட ஒதுக்கீட்டின் பயன்கள் எந்த சாதிக்கு எந்த அளவு போய்ச் சேர்ந்திருக்கிறது என்ற கணக்கெடுப்பை உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி நடத்த மறுக்கிறது நம் ஆளும் வர்க்கம்.

கடைசியாக, இந்த அதிகார வேட்கையும், பொருளீட்டும் வெறியும் நலிந்தவர்களை அவர்களின் வாக்குகளுக்காக “சரிக்கட்டும்” தேவையும் தான் தமிழ்நாட்டு அரசை எங்கும் எதிலும் எவரிடமிருந்தும் சுரண்டும் நிறுவனமாக மாற்றி வைத்திருக்கிறது. இந்தச்  சுரண்டலும் சாதி வலிமை அடிப்படையில் மட்டுமே நடைபெறுகிறது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தங்களுக்கென்று ஒரு அரசியல் பிரதிநித்துவமோ தேர்தல் முடிவுகளைப் பாதிக்கும் எண்ணிக்கை பலமோ இல்லாத பட்டியல் இனத்தவரை வெளிப்படையாகவே புறக்கணிப்பது மட்டுமன்றி எவ்வித தயக்கமுமின்றி வன்கொடுமையும் செய்யலாம் என்பதும் இந்தக் கூட்டதிகாரத்தின் தொடர் விளைவே என்றும் கூறமுடியும்..

நடப்பின் அடிப்படையில் பேச இவ்வளவு இருக்கும்போது ராஜன் குறை போன்ற மானுடவியலாளர் சித்தம் போன போக்கில் மனக்கணக்கு போடுவது வியப்பாக இருக்கிறது.

கடைசியாக இரண்டு:

இரு கட்சிகளின் (திமுக, அதிமுக) தலைமையிலான கூட்டணியே இதுவரை ஆதிக்கம் செலுத்தி வருவதால் எல்லா கட்சிகளும் ஒரு எண்ணிக்கை பெரும்பான்மை வகுப்பினரை நிறுத்துவது என்பதற்கு இடமிருந்ததில்லை. அப்படியே நிறுத்தினாலும் ஆதாயம் வேண்டும் அவ்வகுப்பினர் அதிகாரக் கட்சிகளில் ஒன்றுக்குத் தான் வாக்களிப்பார்கள். எந்த ஒரு கட்சி வென்றாலும் ஒட்டுமொத்தமாக அந்த வகுப்பினருக்கு அனுசரனையாகத்தான் நடந்து கொள்ளும் என்பதற்கு சான்றுகள் ஏராளமாக உள்ளன.

இரண்டாவதாக, திமுக/அதிமுக தலைமையில் எண்ணிக்கைச் சிறுபான்மை வகுப்பினர் இருந்து வருவது சாதிப் பன்மைத்துவத்தை சுட்டுவதன்று. மாறாக, அதிகாரப் போட்டியிலும் சாதிய ஆதிக்க மனப்பான்மையிலும் திளைத்திருக்கும் எண்ணிக்கை பெரும்பான்மை வகுப்பினரை ஒன்று திரட்டி அவர்களுக்கிடையே ஏற்படக்கூடிய நேரடியான போட்டியைத் தவிர்த்து கூட்டதிகாரத்தின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கே இந்த ஏற்பாடு என்பது நாடறிந்த ஒன்று. இது ராஜன் குறைக்குத் தெரியவில்லை என்பதும் வியப்பூட்டுவதாக இருக்கிறது.

---கல்யாணராமன்

Sunday, February 17, 2013

இந்த வாரம்—விஸ்வரூபம், ஹெலிகாப்டர் ஊழல் மற்றும் கீதிகா - ச.சங்கர்

இந்த வாரம்—விஸ்வரூபம், ஹெலிகாப்டர் ஊழல் மற்றும் கீதிகா

எனது நீண்ட நாள் நண்பர் சங்கர் எழுதியதை மீள் பிரசுரிக்கிறேன்.

விஸ்வரூபம் படம் பார்த்தேன் .படம் டெக்னிகலாக நன்றாக எடுக்கப் பட்டிருந்தாலும் அதைத் தவிர யோசித்துச் சிலாகிக்கும் படியோ , திரும்பப் பார்க்கத் தூண்டும் படியோ பெரிதாக ஒன்றும் இல்லை.நிறைய காட்சிகளை மானாவாரியாக எடுத்துத் தள்ளி விட்டு பின் அதிலிருந்து சிலவற்றை எடுத்து ஒட்ட வைத்து படம் பண்ணியது போலவும் , ” இரண்டாம் பகுதியில் ஒரு வேளை விளக்கம் சொல்லுவார் போல” என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு படத்தில் லாஜிகல் சந்தேகங்களும் இருக்கிறது. இந்தப் படத்துக்கு முஸ்லிம் அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி தூக்கியதெல்லாம் அபத்தம். முஸ்லிம் பெயரில் எழுதும் தமிழ் பதிவர்கள் நிறைய பேர் அந்த அபத்தத்தை வரிந்து கட்டிக் கொண்டு சப்போர்ட் பண்ணி எழுதுவது அதைவிட அபத்தமாக உள்ளது.முதல்வர் ஜெயலலிதா வருமுன் காப்போன் திட்டம் போல “சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விடாமல் போவதைப் பாதுகாக்கவே இந்தப் படத்தை தடை செய்தேன் “ என்று கூறியது காமடியின் உச்சகட்டம் மட்டுமல்லாது முஸ்லீம்களை சகிப்புத் தன்மை இல்லாத வில்லன்கள் போல சித்தரிக்கும் மாயைக்கு வழி வகுத்து மேலும் இமேஜ் டேமேஜ் செய்து விட்டது என்றே நான் கருதுகிறேன். இத்தனை பரபரப்பிற்கும் பின்னாலும் கூட இந்தப் படம் கமலின் மற்ற இண்டெலக்சுவல் ??? படங்கள் போலவே பெரு நகரங்கள் தவிர மற்ற இடங்களில் ” ஓட்ட “ வேண்டியிருக்கும்” என்பது என் கணிப்பு.


போனவாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் இன்னொரு விவகாரம் “ ஹெலிகாப்டர் ஊழல் “ .டைம்ஸ் நவ் தொலைக்காட்சி நான்தான் இதை முதன் முதலில் கண்டு பிடித்தேன் என தம்பட்டம் அடித்துக் கொண்டு தினம் தினம் சில ஆவணங்களையும் வெளியிட்டுக் கொண்டு மத்திய அரசாங்கத்தை குதறிக் கொண்டு இருக்கிறார்கள்.மந்திரிகள் எம்பிக்கள் உட்பட காங்கிரஸ்காரர்கள் தினம் தினம் வந்து , வழ வழ , கொழ கொழ என பேட்டி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.இருவருமே இப்படி அடித்துக் கொள்ளத் தேவையில்லை.இந்த அரசாங்க ஊழல் மலிந்த அரசாங்கம் என்றும் ஊழலை திருத்தவோ சரி செய்யவோ எதுவும் செய்யாது என்பதனை அவர்களுடன் சேர்த்து மக்களும் நன்கு அறிவார்கள்.இதில் புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறது ? இதில்(ஹிலிகாப்டர் விவகாரத்தில்) என்ன ஊழல் நடந்தது யார் யார் பெயர் அடிபடுகிறது என்றெல்லாம் எழுதப் போவதில்லை.டைம்ஸ் நவ் தொலைக்காட்சி இரண்டு நாள் பாருங்கள்..எந்த எபிசோடிலிருந்து பர்த்தாலும் உடனே புரியும் மெகா சீரியல் போல தெள்ளத் தெளிவாகப் புரிந்து விடும்.ஆனால் மெகா சீரியல் போலவே முடிவுதான் இல்லை.


போன வாரம் வந்த இன்னொரு செய்தி சில மாதங்களுக்கு முன் ஹரியானா மானில முன்னாள் மந்திரி கோபால் காண்டா என்பவரது தொடர் மிரட்டலால் மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப் படும் கீதிகா என்ற பெண்ணின்( இவர் அந்த மந்திரியால் நடத்தப் பட்டு வந்த விமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் ) தாயாரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டு விட்டதுதான். காரணமாக சொல்லப் படுவது அதே முன்னாள் மந்திரி , கீதிகா கேசை வாபஸ் வாங்கச் சொல்லி விடுத்த மிரட்டலால் ஏற்பட்ட மன உளைச்சல்தானாம். அதிகார மற்றும் பணபலமுள்ளவர்களுக்கு முன் கோர்ட் கேஸெல்லாம் ஒன்றும் பண்ணி விட முடியாது என்பதற்கு இந்தக் கேஸும் நல்ல உதாரணம்.கேஸை இழுத்தடித்தே ஒரு வழி பண்ணி விடுவார்கள்.சாமானியர்களின் கேஸ் பொது மக்கள் அல்லது மீடியாவின் பார்வையில் இருந்தால் மட்டுமே ஏதாவது உருப்படியாக நடக்க வாய்ப்புள்ளது டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு போல.இல்லாவிட்டால் அதோ கதிதான்.இந்த கேஸ் பற்றி தொலைக்காட்சியில் ஒலிபரப்பான விவாதத்தில் முன்னாள் போலிஸ் அதிகாரி கிரண் பேடி சொன்னது கவனத்தில் கொள்ளத்தக்கது.நமது குற்றவியல் சட்டங்கள் அனைத்தும் குற்றம் சுமத்தப்பட்டவரது /இழைத்தவரது உரிமை, பாதுகாப்பு பற்றியே பேசுகிறது,குற்றம் இழைக்கப் பட்டவரது அவர் சார்ந்தவரது உரிமை,பாதுகாப்பெல்லாம் பேசப்படுவது குறைவு. அவர் அரசு தரப்பாகி விட்ட படியால் போலிஸ் மற்றும் அரசு வழக்கறிஞர் தயவில் நீதியை எதிர்பார்க்கும் நிலையில்தான் இருக்கிறார்கள்,அரசு இயந்திரம் எப்படி செயல்படும் என்பது அனைவரும் அறிந்த்தே.இதனால் குற்றம் இழைக்கப்பட்டவர் ஏழையென்றால் அவர் நிலை பரிதாபத்துக்குறியதாகி விடுகிறது.இதனால்தான் பாதிக்கும் மேல் பாதிக்கப் பட்டவர்கள் நீதியே வேண்டாம் என்று ஓடிவிடுகிறார்கள்.சாட்சி பாதுகாப்பு போன்ற உடனடி சட்டத் திருத்தங்கள் ஏற்பட்டால்தான் இந்த நிலை மாறும்.அது வரை ஏழைகளுக்கு நடக்கும் அநீதிகளுக்கு இரக்கப் பட்டு ஐயோ பாவம் என்று சொல்லி விட்டு விட்டு விடாமல் ’ அவ்வப்போது( சென்சேசனலாக இருக்கும் போது மட்டும்) குரல் கொடுக்காமல், நீதி கிடைக்கும் வரை அதை தொடர்ந்து ஃபோகஸில் வைக்க குரல் கொடுப்பது நம் அனைவரது கடமையாகிறது.


அன்புடன்...ச.சங்கர்

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails